எச்சரிக்கை.! வாட்ஸ் அப்-பில் இனி இதை செய்ய முடியாது.!
கொரோனா குறித்த வதந்தியை தடுக்க வாட்ஸ் அப்பில் தகவல்களை பகிர்வதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிக முறை ஃபார்வர்டு ஆன தகவலை 5 பேருக்கு பதில், இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் உள்ள பல்வேறு குழுக்களில் அதிகம் முறை பகிரப்படும் தகவல்களுக்கு மட்டும் இந்த புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு குறித்து சமீபத்தில் வாட்ஸ் அப்பில் போலியான செய்தி ஒன்று வைரலானது. அதாவது பொதுமக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் என நம்பிக்கையோடு இருக்கும் நிலையில், இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. அதுவும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது போல ஓர் அறிக்கை வெளியானது. அதில், இது முதற்கட்ட ஊரடங்கு அதன் பின்னர் சிறுது நாள் ஓய்வு விட்டு மீண்டும், மே மாதம் வரை ஊரடங்கு தொடரும் என போடப்பட்டிருந்தது. இந்த போலி செய்தி தீயாய் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று வாட்ஸ் அப்பில் கோழி கறி, முட்டை சாப்பிட்டால் கொரோனா வரும் என்று வதந்தி வேகமாக பரவியது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டது. இந்த மாதிரி போலியான செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருவதால், தற்போது வாட்ஸ் அப் தகவலைகளை பகிர ஒரு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.