“போரை உடனடியாக நிறுத்த வேண்டும்” -ரஷ்ய அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி!
உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து,உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் நேற்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில்,உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இந்தியா வலுவாக குரல் கொடுக்கவும், பிரதமர் மோடி உலகளவில் மதிப்புமிக்க தலைவர் என்பதால் அவரது பேச்சை புதின் கேட்பார் என தான் நம்புவதாக இந்தியாவிற்கு உக்ரைன் தூதர் இகோர் போலிக்கா கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில்,உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக,பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசியில் புடினை தொடர்புகொண்டு பேசியதாக பிரதமர் அலுவலகம் கூறியதாவது:
“உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பிரச்சனைக்கு அமைதியான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி தனது நீண்டகால நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும்,உக்ரைனில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு பற்றிய இந்தியாவின் கவலைகள் குறித்தும் பிரதமர் மோடி ரஷ்ய அதிபருக்கு தெரிவித்தார்.குறிப்பாக உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள், பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் நாடு திரும்புவதற்கும் இந்தியா அதிக முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் கூறினார்,என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,இந்தியா தனது நடுநிலைமையை கைவிட வேண்டும் என்றும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டதற்காக ரஷ்யாவின் உலகளாவிய கண்டனத்தில் சேர வேண்டும் என்றும் பிரான்ஸ் வலியுறுத்திய நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.