வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

வக்பு மசோதா குறித்து இதுவரை 284 பிரதிநிதிகள் மற்றும் 25 வாரியங்கள் கருத்துக்களை முன் வைத்துள்ளதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவலை தெரிவித்துள்ளார்.

K. C. Venugopal

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாதாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதா முதன்முதலில் 2024 ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்கள் இதை முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகவும், அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும் விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.

அந்த எதிர்ப்புகளை தொடர்ந்து மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு (Joint Parliamentary Committee – JPC) அனுப்பப்பட்டு, விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. JPC, 19 கூட்டங்களுக்கு பிறகு, பிப்ரவரி 2025 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது, மேலும் சில திருத்தங்களுடன் மசோதாவை அங்கீகரித்தது. எனவே, இன்று வக்பு  திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த  மசோதா மக்களவையில் தாக்கல் செய்த உடனே எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேச தொடங்கினார்கள். காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் இது குறித்து பேசுகையில் ” இந்த மாதிரியான மசோதாவை (வக்ஃப் திருத்த மசோதா) நீங்கள் இந்த சபைக்கு கொண்டு வரும்போது, குறைந்தபட்சம் உறுப்பினர்களுக்கு திருத்தங்கள் கொடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும்… நீங்கள் சட்டத்தை புல்டோசர் மாதிரி தள்ளி விடுகிறீர்கள். இது அப்படிப்பட்ட சட்டம். திருத்தங்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும். பல பிரிவுகளுக்கு திருத்தங்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால் எங்களுக்கு சிறிது நேரம் கூட இல்லை” என பேசினார்.

திமுக எம்.பி. கனிமொழி :  இது குறித்து பேசுகையில் திமுக இதை எதிர்க்கிறது. எங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். இந்த நாட்டின் சிறுபான்மையினரை நாங்கள் கைவிட மாட்டோம். இந்தியா கூட்டணி ஒன்றாக சேர்ந்து இந்த மசோதாவை எதிர்க்கிறது” என கூறியுள்ளார்.

கிரண் ரிஜிஜு பேசியது என்ன? 

மசோதா தாக்கல் செய்ததில் இருந்து நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச தொடங்கியது வரை தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்து முழக்கமிட்டனர். இருப்பினும், இதனை தாண்டி சில விஷயங்களையும் கிரண் ரிஜிஜு பேசினார். இது குறித்து பேசிய அவர் ” வக்ஃப் திருத்த மசோதா பற்றி இரு சபைகளின் கூட்டு குழுவில் நடந்த விவாதம், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை நடந்ததே இல்லை என்று சொல்லிகொள்ள விரும்புகிறேன்.  இந்த நேரத்தில் கூட்டு குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி சொல்லி வாழ்த்துகிறேன்… இதுவரை,  284 பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் குழுவுக்கு முன் வைத்திருக்கிறார்கள். 25 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வக்ஃப் வாரியங்களும் தங்கள் கருத்துகளை சமர்ப்பித்திருக்கின்றன.

நாம் விவாதிக்கும் அவரது மசோதா ஒரு புதிய விஷயமல்ல. இந்த விஷயத்தின் வரலாறு சுதந்திரத்திற்கு முந்தையது. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், 1930 ஆம் ஆண்டில், குடும்ப வக்ஃபின் பங்கை வலியுறுத்தி முஸ்லிம் வக்ஃப் செல்லுபடியாக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு, 1954 இல், சுதந்திர இந்தியாவின் முதல் வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது.

இந்த நேரத்தில்தான் 1954 சட்டத்தில் மாநில வக்ஃப் வாரியங்களுக்கான ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, பல்வேறு திருத்தங்கள் மூலம், 1995 வக்ஃப் சட்டம் விரிவாக உருவாக்கப்பட்டது” எனவும் பேசினார்.  மேலும், இந்த மசோதா குறித்து 8 மணி நேரம் விவாதம் நடைபெறலாம் என கூறப்படும் நிலையில் இன்னும் பலர் எதிர்ப்பு தெரிவித்து பேசுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்