தொடங்கியது மக்களவை தேர்தல் திருவிழா.. 102 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு.!
Election2024 : 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.
நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் இன்று (ஏப்ரல் 19) முதல் தொடங்கி, 7 கட்டங்களாக வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
முதற்கட்ட தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் தற்போது காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணி வரையில் நடைபெறும். 6 மணிக்கு வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் கடைசி வாக்காளர் ஆரம்பித்து வரிசையில் முதலில் நிற்கும் வாக்காளர்கள் வரையில் டோக்கன் கொதூக்கப்பட்டு, அதற்கு பிறகு வரும் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் 1 தொகுதி, அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 2 தொகுதிகள், அசாமில் 14 தொகுதிகளில் 5 தொகுதிகள், பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 4 தொகுதிகள் மட்டும், சத்தீஸ்கர் 11 தொகுதிகளில் 1 தொகுதி மட்டும், மத்திய பிரதேசத்தில் 29 தொகுதிகளில் 6 தொகுதிகள் மட்டும் , உத்திர பிரதேசத்தில் 80 தொகுதிகளில் 8 தொகுதிகள் மட்டும் , மகாராஷ்டிராவில் 48 தொகுதிகளில் 5 தொகுதிகள் மட்டும்,
ஜார்கண்டில் 5 தொகுதிகளில் 1 தொகுதி மட்டும் , உத்ரகாண்ட்டில் மொத்தமுள்ள 5 தொகுதிகளில், மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளில் 3 தொகுதிகள் மட்டும், மணிப்பூரில் மொத்தமுள்ள 2 தொகுதிகள், லட்சத்தீவு 1 தொகுதி, மேகாலயா 2 தொகுதியிலும், மிசோராம், நாகலாந்து, சீக்கிம், திரிபுரா என ஒரு தொகுதி கொண்ட பகுதிகளிலும் என மொத்தமாக 102 மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.