விறுவிறு வாக்குப்பதிவு : வயநாடு இடைத்தேர்தல், ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தொடக்கம்.!
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல், வயநாடு தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றிற்கான வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குபதிவு தொடங்கியுள்ளது. மீதமுள்ளு 38 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
43 தொகுதிகளில் மொத்தம் 73 பெண் வேட்பாளர்கள் உட்பட 683 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா (JMM) 30 தொகுதிகளிலும், பாஜக 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இதில் JMM மற்றும் காங்கிரஸ் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. அதேபோல மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அந்த கூட்டணி முனைப்பில் உள்ளது. அதேபோல, பாஜகவும் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க முனைப்பில் உள்ளனர்.
ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தவிர்த்து மொத்தம் 10 மாநிலங்களில் ஒரு மக்களவை, 31 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் தற்போது தொடங்கியுள்ளது.
அதில் முக்கியமாக, கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று காலைஇடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாசும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோகேரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியுள்ளது.
மேலும், கர்நாடக மாநிலத்தில் 3 சட்டமன்ற தொகுதிகள் (ஹிகான், சந்தூர் மற்றும் சன்னபட்னா) ராஜஸ்தான் மாநிலத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள், அசாமில் 5 சட்டமன்ற தொகுதிகள், பீகாரின் 4 சட்டமன்ற தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 2 சட்டமன்ற தொகுதிகள், சத்தீஸ்கர், குஜராத், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தல ஒரு தொகுதிகள் என மொத்தம் 31 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.