70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!
70 தொகுதிகளுக்கான டெல்லி சட்டமன்ற தேர்தல் 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டெல்லி சட்டமன்றத்தின் 70 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 13,766 வாக்குச்சாவடிகளில் பதட்டமான வாக்குசாவடிகளில் பாதுகாப்புக்காக 30,000 போலீசார், 220 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 19,000 வீட்டுக் காவலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சுமார் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற வாக்குச்சாவடிகள் ட்ரோன்கள் மூலமாகவும் தீவிர கண்காப்பில் இருந்து வருகிறது. கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, டெல்லியில் 60% க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. 2015 ஆம் ஆண்டில் 67.47% வாக்குகளும், 2020 ஆம் ஆண்டில் 62.60% வாக்குகளும் பதிவாகி சாதனை படைத்தன.