மிசோரமில் இந்த வாக்குச்சாவடிக்கு மீண்டும் வாக்குப்பதிவு..!

மிசோரமின் ஐஸ்வால் தெற்கு-III தொகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி நாளை முல்லுங்து வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

மிசோரமில் நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 8.57 லட்சம் வாக்காளர்களில் 80 சதவீதம் பேர் வாக்களித்தனர். 1,276 மையங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 18 பெண்கள் உட்பட 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல்ஆணையத்தின்  தரவுகளின்படி, மிசோரமின் 11 மாவட்டங்களில் செர்ச்சிப்பில் அதிகபட்சமாக 84.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தெற்கு மிசோரமில் சியாஹா (76.41 சதவீதம்) மற்றும் சைதுல் (75.12 சதவீதம்) வாக்குகள் பதிவாகியுள்ளன.குறைவாக ஐஸ்வால் மாவட்டத்தில் 73.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மிசோரம் மாநிலத்தில் கடந்த 2018 தேர்தலில் மொத்தம் 81.61 சதவீதம் வாக்கு பதிவாகியது.

முதல்வர் ஜோரம்தங்கா வாக்களித்தார்:

ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF), முக்கிய எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) மற்றும் காங்கிரஸ் ஆகியவை 40 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பாரதிய ஜனதா கட்சி 23 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இது தவிர 27 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும்.

முதல்வர் ஜோரம்தங்கா வாக்களித்த ஐஸ்வாலில் உள்ள வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ராம்லுன் வெங்கலை தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு முதல்வர் காலையிலேயே வாக்களிக்க சென்றார். ஆனால் அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர் மீண்டும் காலை 9.40 மணிக்கு வந்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்