வோடபோன் நிறுவனத்திற்கு ரூ. 27 லட்சம் அபராதம் விதித்த ராஜஸ்தான் அரசு..!
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் கீழ் தகவல் கசிவு விவகாரத்தில் ராஜஸ்தான் அரசு வோடபோன் நிறுவனத்திற்கு ரூ. 27 லட்சம் அபராதம் விதித்தது.
ராஜஸ்தானில் தரவு கசிந்த வழக்கில் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணலால் நாயன் என்ற நபரின் வோடபோன் சிம் சேதமடைந்தது. இது குறித்து, தனது சிம்மை பெற நைன் வோடபோன் நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த சிம் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் பானுபிரதாப் என்ற மற்றொரு நபருக்கு வழங்கப்பட்டது.
அந்த சிம் தனது ஓவர் டிராஃப்ட் வசதியுடன் இணைக்கப்பட்டதால் பானுப்ரதாப் நைனின் கணக்கில் இருந்து ரூ .68 லட்சத்தை எடுத்துள்ளார். ஐந்து நாட்களுக்குப் பிறகு நாயன் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட செய்தி தெரியவர போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீஸ் வழக்கு பதிவு செய்து பானுப்ரதாப் கைது செய்யப்பட்டார். ரூ .68 லட்சத்தில், சுமார் ரூ .44 லட்சம் கிருஷ்ணலால் நாயனிற்கு திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் மீதமுள்ள தொகை நிலுவையில் உள்ளதால், கிருஷ்ணலால் நாயன் ஐடி சட்டத்தின் கீழ் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐடி மற்றும் தகவல் தொடர்பு முதன்மை செயலாளர் அலோக் குப்தா, வோடபோனுக்கு ரூ .27.23 லட்சம் அபராதம் விதித்தார். இதனுடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவருக்கு அபராதத் தொகையை நிறுவனம் வழங்காவிட்டால், மாதத்திற்கு 10 சதவிகித வட்டியை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.