ஏர் இந்தியாவுடன் இணைகிறது விஸ்தாரா – டாடா குழுமம் அறிவிப்பு
ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு.
ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனங்கள் 2024 மார்ச் மாதத்திற்குள் ஒருங்கிணைக்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை ஒன்றிணைக்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதன் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு தெரிவித்துள்ளது.
அதாவது, டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் இணைவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டாடாவின் கூட்டு நிறுவனமான விஸ்தாரா ஏர்லைன்ஸ் குருகிராமை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் டாடா சன்ஸுக்கு 51% பங்கும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-க்கு 49% பங்குகளும் உள்ளன. இந்த சமயத்தில் இணைப்பு ஒப்பந்தப்படி, ஒன்றிணைந்த ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரூ.2,058.5 கோடியை முதலீடு செய்ய உள்ளது. விஸ்தாரா இணைப்பு மற்றும் புதிய முதலீட்டை அடுத்து ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-யின் பங்கு 25% ஆக அதிகரிக்கும். உரிய அனுமதி கிடைத்தவுடன் ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவை இணைக்கும் நடவடிக்கைகள் 2024 மார்ச்சில் நிறைவு பெறும் என கூறப்படுகிறது.