டெல்லி போராட்டத்தில் வன்முறை: 5 பேர் பலி 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!
- டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மத்திய அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மாவூஜ் புர் பகுதியில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, பெட்ரோல் நிலையங்களுக்குத் தீவைக்கப்பட்டது. பதற்றமான சூழ்நிலை நிலவியதால் போலீசாரும் துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலவரக்காரர்களை விரட்டியடித்த பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், டெல்லி வன்முறையில் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த கலவரத்தில் தலைமை காவலர் ஒருவர், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல் இந்த கலவரத்தின்போது துப்பாக்கியால் சுட்ட ஷாருக் என்பவரை காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் இந்த கலவரத்தால் 10 இடங்களில் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கலவரம் நடக்கும் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், மேலும் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடி அறிவித்துள்ளார்.