கொரோனா தடுப்பு விதிகளை மீறினால் ரூ. 1லட்சம் அபராதம், 2ஆண்டுகள் சிறை – ஜார்க்கண்ட் அரசு.!
கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு ரூ. 1லட்சம் அபராதமும், 2ஆண்டுகள் சிறை தண்டனையும் அளிக்க ஜார்க்கண்ட் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா தொற்றுக்கான மருந்தான கோவாக்ஸினை ஆகஸ்ட் 15 முதல் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது .
இந்நிலையில், நேற்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இனி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணியாமல் வெளியே செல்வது, பொது இடங்களில் எச்சில் துப்புவது என நடவடிக்கைகளை மீறி செய்பவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதுவரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6,485பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது 3,367பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் ,3024பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.