பிறந்தநாள் அன்று கோவிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனுக்கு 35,000 அபராதம் விதித்த கிராமம்!
கர்நாடகாவில் தனது பிறந்தநாள் அன்று கோவிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனுக்கு கிராமத்தினர் 35,000 அபராதம் விதித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டம் மியாபுரா எனும் கிராமத்தில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள தலித் சமூகத்தினர் கோவிலுக்கு செல்ல வேண்டுமானால், வெளியே நின்று தரிசனம் செய்வது வழக்கமாம்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி தனது பிறந்த நாளை முன்னிட்டு 4 வயது சிறுவன் ஒருவன் அப்பகுதியில் உள்ள ஹனுமான் கோவில் ஒன்றிற்குள் ஓடியுள்ளார். இதனை கண்ட கோவில் அர்ச்சகர் மற்றும் அப்பகுதி உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் செப்டம்பர் 11 ஆம் தேதி கிராம சபையைக் கூட்டி, சிறுவனின் பெற்றோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், கோவிலை சுத்தம் செய்வதற்காக பத்தாயிரம் ரூபாய் பணமும் கட்டுமாறு கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அந்த கிராமத்திற்கு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பி மாவட்ட நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பின்னர், கிராமத்தில் உள்ள பெரியவர்கள் இதற்காக மன்னிப்பு கேட்டதாகவும், தவறான புரிதலின் காரணமாக இது நடந்தது என அவர்கள் கூறியதாகவும் தாசில்தார் சித்தேஷ் கூறியுள்ளார்.