கண்ணீர் விட்டு அழுத துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு..
துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா தலைவருமான எம் வெங்கையா நாயுடு பணி ஓய்வு பெற இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இன்று நடந்த ராஜ்யசபா கூட்டத்தொடரின் போது, அரசியல் தலைவர்கள் பிரியாவிடை உரைகளை ஆற்றியதால் அவர் உணர்ச்சிவசப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பல தலைவர்கள் ஓய்வு பெறும் துணை ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரியாவிடை உரைகளை நிகழ்த்தினர். திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்பி டெரெக் ஓ பிரையன், வெங்கையா நாயுடு உடனான சில பழைய நினைவுகளை நினைவு கூர்ந்ததை அடுத்து அவர் கண்ணீர் விட்டார்.
டெரெக் ஓ பிரைன் அவரது பிரியாவிடை உரையில், ஒரு கதையை விவரித்தார். ஒரு கிராமத்தில் 8 காளைகளை கொண்ட குடும்பம் இருந்தது. ஒரு நாள், காளைகள் இருந்த இடம் தீப்பற்றியதில் ஒரு காளை எதிர்பாராவிதமாக ஒரு பெண்ணின் வயிற்றில் கொம்பினால் தாக்கியது. அப்போது அப்பெண்ணின் கையில் ஒரு வயது குழந்தை இருந்தது. குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு, அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தார். தன் தாயை இழந்த அந்த ஒரு வயது குழந்தை தான் வெங்கையா நாயுடு.
இது உங்கள் கதை, ஐயா, உங்கள் முதல் இழப்பு. அந்த இழப்பிலிருந்து, நீங்கள் செய்த அனைத்து சாதனைகளையும் விக்கிபீடியா பதிவுகளில் மட்டுமல்ல, நீங்கள் வாழும் வாழ்க்கையில் காண்கிறோம் என்று டெரெக் மேலும் கூறினார். வரும் புதன்கிழமை வெங்கையா நாயுடு ஓய்வு பெற இருக்கிறார். அவருக்குப் பின் ஜகதீப் தன்கர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பதவியேற்கிறார்.