பக்கம் பக்கமாய் விளம்பரங்கள்.., வியாபாரமாகும் பயிற்சி மையங்கள்.? துணை ஜனாதிபதி வேதனை.!
டெல்லி : கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஓர் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி தானியா சோனி, ஸ்ரேயா யாதவ் மற்றும் நவீன் டெல்வின் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மாணவர்கள் உயிரிழப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி மாணவர்களின் உயிரிழப்பு நாடாளுமன்றம் வரையில் சென்றுள்ளது. அங்கும் இது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் மாநிலங்களவை கூட்டத்தொடரில் துணை குடியரசு தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் வருத்தம் தெரிவித்தார்.
அவர் மாநிலங்களவையில் கூறுகையில், ” நாடாளுமன்ற விதியின் கீழ் எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது. டெல்லி அதிகாரிகளின் அலட்சியத்தால் ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முன்னேற வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் ஒரு செய்தித்தாளைப் படிக்கும்போது, முன்பக்கத்திலேயே ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் அளவுக்கு தேர்வு மையங்களின் விளம்பரங்கள் தான் இருக்கிறது என்று பயிற்சி மையங்கள் வியாபார நோக்கத்துடன் செயல்படுகிறது என்று வருத்தம் தெரிவித்தார் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர்.