உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என். ரவி பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த சூழலில் மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தன்கர் கேள்வி எழுப்பி பேசியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவை தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உச்ச நீதிமன்றத்தை நோக்கி சில கேள்விகளை காட்டத்துடன் எழுப்பி பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் “குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவரை, நீதிமன்றம் வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது; உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது, ஆனால் விசாரணை என்பது நிர்வாகத்தின் (Executive) அதிகார வரம்பிற்கு உட்பட்டது. இது நீதித்துறையின் (Judiciary) அதிகார வரம்பு அல்ல. இந்தக் குழு இந்திய அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டதா? இல்லை. இந்த மூன்று நீதிபதிகள் குழுவுக்கு பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட எந்தச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் உள்ளதா? இல்லை. ஒரு குழு அதிகபட்சம் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும்.
நீதிபதிகளுக்கு உள்ள முறையின்படி, பாராளுமன்றத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு மாதம் கடந்துவிட்டது. விசாரணைக்கு விரைவு, துரிதம் மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமான பொருட்களைப் பாதுகாப்பது அவசியம். நாட்டின் குடிமகனாகவும், நான் வகிக்கும் பதவியிலிருந்தும், நான் கவலைப்படுகிறேன். நாம் சட்டத்தின் ஆட்சியை (Rule of Law) நீர்த்துப்போகச் செய்கிறோமா? அரசியலமைப்பை நமக்கு வழங்கிய ‘நாம், மக்கள்’ (We the People) என்பவர்களுக்கு நாம் பொறுப்பு கூற வேண்டாமா?
இதை ஒரு சோதனை வழக்காக ஆராய வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்துகிறேன். இந்தக் குழுவுக்கு என்ன சட்டபூர்வ நியாயமும் அதிகார வரம்பும் உள்ளது? அரசியலமைப்பையும், பாராளுமன்றத்தையும் மீறி, ஒரு தரப்பினர் தனியாக சட்டம் உருவாக்க முடியுமா? என் கருத்துப்படி, இந்தக் குழுவின் அறிக்கைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் இல்லை.
இப்போது நாடு பதற்றத்துடன் காத்திருக்கிறது. மக்கள் மிகுந்த மரியாதையுடன் பார்க்கும் ஒரு முக்கியமான நிறுவனம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது. இப்போது ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. எவ்வளவு சிக்கலான பிரச்சினையாக இருந்தாலும், எத்தனை மறைக்கப்பட்ட உண்மைகள் இருந்தாலும், இப்போது அவற்றை வெளிப்படுத்த வேண்டிய நேரம். உண்மைகள் பொதுவெளியில் வரவேண்டும்.
அரசமைப்பின் 145 பிரிவை விளக்குவதுதான் நீதிபதிகளுக்கு இருக்கும் ஒரே உரிமை. சூப்பர் நீதிமன்றம் போல நீதிபதிகள் செயல்படுகிறார்கள். சட்டம் இயற்றுவது, நிர்வாகம் செய்வது போன்ற நாடாளுமன்ற பணிகளை நீதிபதிகள் செய்கின்றனர். இதெல்லாம் பார்க்கும்போது நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்? நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என தோணுகிறது” எனவும் ஜெகதீப் தன்கர் அடுக்கடுக்கான கேள்விகளை வைத்து கோபத்துடன் பேசியுள்ளார்.