விறுவிறுப்பான 5ஜி அலைக்கற்றை ஏலம்… மூன்றாவது நாளில் 10வது சுற்று!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5ஜி அலைக்கற்றைக்கான இன்று மூன்றாவது நாள் ஏலம்.
இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நான்கு நிறுவனங்கள் ரூ.4.3 லட்சம் கோடி மதிப்புள்ள 72 GHz அலைக்கற்றையை ஏலம் எடுக்க உள்ளனர். இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானியின் அதானி என்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ள 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில், 10வது சுற்று ஏலம் நடந்து வருகிறது. கடந்த ஏலத்தில், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ரூ.1.49 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றையை ஏலம் கோரியுள்ளன. நான்கு சுற்றுகள் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை தொடக்க நாளில் 1.45 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை ஏலம் எடுக்க விண்ணப்பங்களை சமர்ப்பித்தன. மேலும் நேற்று நடைபெற்ற ஐந்து சுற்றுகளில் அலைக்கற்றைகளுக்கான ஏல தொகை அதிகரித்தது.
இதனைத்தொடர்ந்து, 9-ஆவது சுற்று முடிவில் இதுவரை ரூ.1,49,454 கோடி மதிப்புள்ள ஏலம் கோரப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மூன்றாவது நாள் ஏலத்தில் 10வது சுற்றில் ஏல தொடுகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஐந்து சுற்று ஏலம் நடத்தப்பட்டது, மேலும் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அனைத்து நிறுவனங்களுக்கும் இடையே “நல்ல போட்டி” காணப்படுவதாகக் கூறினார்.