கான்பூரில் கடும் குளிர்! 98 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு.!
கான்பூரில் ஏற்பட்டுவரும் கடும் குளிரால், ஒரே வாரத்தில் 98 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தற்போது கடும் குளிர் வீசிவருகிறது, இந்த குளிருக்கு கடந்த 5 நாட்களில் மட்டும், 98 பேர் மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்புகள், காரணமாக உயிரிழந்துள்ளனர். கான்பூரில் உள்ள லக்ஷ்மிபத் சிங்கானியா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி மற்றும் கார்டியாக் சர்ஜரி, இது குறித்து வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த ஒரு வாரத்தில் 723 இதய நோயாளிகள், மருத்துவமனையின் அவசர மற்றும் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்.பி.எஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாலஜி அளித்துள்ள புள்ளிவிவரங்களின் படி, 98 இறப்புகளில் 44 பேர் மருத்துவமனையில் இறந்ததாகவும், 54 நோயாளிகள் சிகிச்சைக்கு முன்பே இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த இதய நோய் நிறுவனத்தில் மொத்தம் 604 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்களில் 54 புதிய நோயாளிகளும் 27 பழைய நோயாளிகளும் அடங்குவர்.
இந்த கடும் குளிர் காலநிலையில் இருந்து நோயாளிகளை பாதுகாக்க வேண்டும், என இருதயவியல் துறை இயக்குனர் வினய் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மேலும் குளிர் காலநிலையில் மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு மட்டுமல்லாமல் பதின்ம வயதினருக்கு கூட ஏற்படும் அபாயம் இருப்பதால், வயது வித்தியாசமின்றி அனைவரும் வெப்பம் ஏற்படுத்தி தற்காத்துக் கொள்ளுமாறும், முடிந்தவரை வீட்டிற்குள் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.