பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன் – அத்வானி
பாபர் மசூதி தொடர்பான தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன் என்று அத்வானி தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் பாபர் மசூதி 1992 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்ட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களுக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.17 பேர் இறந்து விட்டதால் 32 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது.இந்த வழக்கில் ,கடந்த 2001 ஆம் ஆண்டு மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் கல்யாண் சிங் உள்ளிட்டோரை அகமதபாத் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ போலீசார் மேல்முறையிடு செய்தது.லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த வந்த லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ,பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல , அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐயால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர். எனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறுகையில், நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் முக்கியமானது,இதனை முழு மனதுடன் வரவேற்கிறேன்.இந்த தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாகும். இந்தத் தீர்ப்பின் செய்தியை டிவியில் பார்த்தபோது ஜெய் ஸ்ரீராம் என்ற மந்திரத்தை கூறினோம் என்று தெரிவித்துள்ளார்.