இன்று முதல் அமலுக்கு வந்த புதிய தொலைத்தொடர்பு சட்டங்கள்.! விவரங்கள் இதோ….
டெல்லி: பல்வேறு தொலைத்தொடர்பு விதிமுறைகள் மற்றும் மாற்றங்கள் கொண்ட ‘புதிய தகவல் தொலைத்தொடர்பு துறை விதிகள் 2023’ இன்று (ஜூலை 26) அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளானது, இந்திய தந்தி சட்டம் 1885 மற்றும் இந்திய வயர்லெஸ் டெலிகிராப் சட்டம் 1933 ஆகிய இரண்டிலும் மாற்றம் கொண்டு வந்து உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜூன் 26) முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளானது, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு உள்ளிட்ட ஏதேனும் காரணங்களால் நெட்வொர்க்கின் கட்டுப்பாடு மற்றும் அதன் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ள இந்த சட்டம் அனுமதிக்கும்.
புதிய புதிய சட்டத்தின்படி, மக்கள் தங்கள் பெயரில் அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்கிக்கொள்ள அனுமதிக்கிறது. இருந்தாலும் , ஜம்மு மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளில் 6 சிம் கார்டுகள் வரை மட்டுமே வாங்க அனுமதிக்க முடியும். அதிகபட்ச வரம்பை தாண்டிச் சென்றால், முதல் முறை 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் , அதைத் தொடர்ந்து மீறினால் 2 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கள் அடையாள ஆவணங்களை தவிர்த்து வேறு ஒருவரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி, மற்றவர்களை ஏமாற்றி இருந்தால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
பயனரின் அனுமதியின்றி அனுப்பப்படும் வணிகச் செய்திகள் தொடர்புடைய புகார்களுக்கு சம்பந்தப்பட்ட ஆபரேட்டருக்கு 2 லட்ச ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
தனியாருக்கு சொந்தமான இடங்களில் மொபைல் டவர்களை நிறுவவோ அல்லது தொலைத்தொடர்பு கேபிள்களை அமைக்கவோ உரிமையாளரின் அனுமதியோடு டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க அரசு அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேசத்தின் பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் நிலைகளிலோ, அவசரகால சூழ்நிலைகளின் போதோ இரு நபர்களுக்கு இடையேயான செய்திகளின் பரிமாற்றங்களைத் தடுக்கவும் அதனை கட்டுப்படுத்தவும் அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகிறது.
செய்தி நோக்கங்களுக்காக மாநில மற்றும் மத்திய அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் அனுப்பும் செய்திகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இருந்தும், சில சமயம் அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்களின் அழைப்புகள் மற்றும் செய்திகள் கூட தேவை இருப்பின் கண்காணிக்கப்படலாம். அவர்களின் செய்தி பரிமாற்றம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் காணப்பட்டால் அதனை தடுக்கவும் அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என பல்வேறு தகவல் தொலைத்தொடர்பு விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.