ஞானவாபி மசூதி வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது, வாரணாசி மாவட்ட நீதிமன்றம்!
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் எந்த மனுவை முதலில் விசாரிப்பது குறித்து இன்று உத்தரவு.
உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலை ஒட்டி உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபடுவதற்கு அனுமதி கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சிலர் வழக்கு தொடுத்திருந்தனர். அதாவது இந்து கோவிலாக இருந்த இடத்தில்தான் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளது என்பது அவர்களது வாதம். இதன்பின் மசூதி வளாகத்திற்குள் ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், மசூதி வளாகத்துக்குள் கள ஆய்வு செய்தபோது சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மசூதி நிர்வாகம் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, ஆய்வு விவரங்களை கசிய விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை பாதுகாக்கவும், இஸ்லாமிர்களை வழிபாடு மேற்கொள்ளவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு 8 வாரங்களுக்கு அமலில் இருக்கும் எனவும், குறிப்பாக இவ்வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று ஞானவாபி மசூதி வழக்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற உத்தரவு 8 வாரங்களுக்கு அமலில் உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக வாரணாசி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி அஜய் கிருஷ்ணர் நேற்று விசாரணையை மேற்கொண்டார். அப்போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் எந்த மனுவை முதலில் விசாரிப்பது என்பது தொடர்பான உத்தரவு இன்று வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில், ஞானவாபி மசூதி வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது, வாரணாசி மாவட்ட நீதிமன்றம். ஆணையரின் ஆய்வறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.