Vanadium: குஜராத் கடற்கரையில் அரிய உலோக வெனடியம் கண்டுபிடிப்பு.!
குஜராத்தின் அலங்கிற்கு அருகில் உள்ள கம்பாட் வளைகுடாவில் இருந்து சேகரிக்கப்பட்ட வண்டல் மாதிரிகளில் பல்வேறு தொழில்துறை பயன்பாடுகளுக்கு முக்கியமான மூலப்பொருளான வெனடியம் (Vanadium) எனப்படும் அரிய உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் வளர்ந்து மின்சார வாகன (EV) உற்பத்தியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. ஏனெனில் வெனடியம் பேட்டரி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மூலப்பொருளாகும். இது வெனடியம் ரெடாக்ஸ் ஃப்ளோ பேட்டரிகளின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பேட்டரிகள் சாதாரண பேட்டரிகளை போல அல்லாமல் பெரிய அளவிலான ஆற்றலை சேமித்து வைக்க உதவும். ஆனால், இந்த வெனடியம் இயற்கையில் எளிதில் கிடைக்காத ஒரு அரிதான உலோகம் ஆகும். இது டைட்டானோமேக்னடைட் போன்ற 55 வெவ்வேறு கனிமங்களில் காணப்படுகிறது.
இந்த டைட்டானோமேக்னடைட் என்பது உருகிய எரிமலை குழம்பு ஆனது விரைவாக குளிர்ச்சியடையும்போது உருவாகும் ஒரு பொருள். இதில் இந்த வெனடியம் உள்ளது. அருணாச்சல பிரதேசம், கர்நாடகா, ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் சிறிய அளவிலான வெனடியம் முன்பு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.