வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா : இரு மாநில முதல்வர்கள் பங்கேற்பு.!
வைக்கம் போராட்டத்தின் 100ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
வைக்கம்: கேரள மாநிலம் வைக்கத்தில் இன்று வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில முதல்வர்கள் இன்று பங்கேற்க உள்ளனர்.
1924 – 1932 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில், மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த தடையை நீக்க, போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து சென்று தந்தை பெரியார் பங்கேற்று வெற்றிபெற்றார். எனவே, கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் போராட்டம் நடத்திய இடத்தில் 70 சென்ட் பரப்பளவில் நினைவகம் உள்ளது. அந்த நினைவகத்தை புதுப்பிக்க தமிழக அரசு சார்பில் ரூ.8,50 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டு இருந்தது.
தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள பெரியார் நினைவிடத்தில், அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்பட கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இதனை திறந்து வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் கேரளா சென்றடைந்தார். இந்த விழாவானது கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெறுகிறது.