தடுப்பூசி பற்றாக்குறையா..? அக்டோபருக்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசி..!
அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் கிடைக்க மத்திய அரசு முயற்சிசெய்து வருகிறது என கூறப்படுகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலை நாட்டை தாக்கிவருகிறது. கடந்த பல நாட்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதாக பல மாநிலங்களில் புகார் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்கும் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் முதல் கொரோனா தடுப்பூசியை அதிகப்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாசின் தடுப்பூசி மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், வருகின்ற அக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் ஐந்து தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் இந்த ஐந்து தடுப்பூசிகள் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி, நோவாவாக்ஸ் தடுப்பூசி, ஸைடஸ் கெடிலா தடுப்பூசி ஆகியவை அக்டோபருக்குள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி அடுத்த 10 நாட்களில் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசி 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.