உத்தரகண்ட் சுரங்க விபத்து : இறுதி கட்டத்தில் மீட்புப்பணிகள்.. சற்று நேரத்தில் வெளியே வரும் தொழிலாளர்கள்.!
உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென மண்சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கினர்.
சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இன்றுடன் 12வது நாட்களாக தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதிக்கு செங்குத்தாக சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்றது.
சுரங்க விபத்து – துளையிடும் எந்திரத்தின் பிளேடுகள் சேதம்..!
நேற்று இரவே சுரங்கம் முழுதாக தோண்டப்பட்டு அதிகபட்சம் இன்று அதிகாலைக்குள் தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்படுவர் என கூறப்பட்டு வந்த நிலையில், சுரங்கம் தோண்டும் பணியில் இறுதிக்கட்டத்தை எட்டும்போது இரும்பு கம்பிகள் அந்த பகுதியில் இருந்த்தால் எந்திரத்தின் பிளேடுகள் உடைந்து சேதமடைந்தன.
இதனால், மீட்பு பணிகள் மீண்டும் சற்று தொய்வடைந்தன. இருந்தாலும், கைவசம் பிளேடுகள் இருப்பதால் இன்னும் சற்று நேரத்தில் மீட்பு பணிகள் நிறைவடையும் என கூறப்பட்டது. இதுகுறித்து மீட்பு குழுவினர் கூறுகையில், ” மீட்பு பணி கிட்டத்தட்ட கடைசி கட்டத்தில் உள்ளது. இன்னும் 1 அல்லது 2 மணி நேரத்தில் சுரங்கம் முழுதாக தோண்டப்பட்டு, தொழிலாளர்களை வெளியே மீட்டுவிடுவோம் எனவும் , இடிபாடுகளில் சிக்கிய இரும்பு துண்டுகள் வெட்டி அகற்றப்பட்டது” எனவும் அவர்கள் கூறினர்.