உத்தரகாண்ட் பனிச்சரிவு…உயிரிழப்பு 5-ஆக உயர்வு! மீட்பு பணி தீவிரம்…
மீட்பு பணி நடந்து வரும் நிலையில், பனிப்பொழிவு மற்றும் கடுமையான வானிலை நிலைமை மீட்பு பணிகளை சவாலாக மாறியுள்ளது.

உத்தரகாண்டு : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கிய அந்த தொழிலாளர்கள் எல்லை சாலைகள் அமைப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தனர். அப்போது, திடீரென பனிச்சரிவு ஏற்பட அவர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அறிந்து உடனடியாக மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு, இதுவரை 46 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் ஐந்து பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மொஹிந்திர பால் மற்றும் ஜிதேந்திர சிங், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சித் யாதவ் மற்றும் உத்தரகண்டைச் சேர்ந்த அலோக் யாதவ் ஆகியோர் என்பதும் தெரிய வந்துள்ளது.
57 பேரில் 5 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களை தவிரவும் மீட்கப்பட்டவர்களை தவிரவும் மீதமிருந்த 3 தொழிலாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது. காணாமல் போன தொழிலாளர்களைக் கண்டுபிடிக்க இந்திய ராணுவம், இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை (ITBP), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), எல்லை சாலைகள் அமைப்பு (BRO), மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவற்றின் பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.
பனிப்பொழிவு மற்றும் கடுமையான வானிலை நிலைமை மீட்பு பணிகளை சவாலாக மாற்றினாலும், மீட்புக்குழுக்கள் தீவிரமாக மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும், உத்தரகாண்டு மாநில முதல்வர் பூஷ்கர் சிங் தாமி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் தாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதி அளித்தார்.