பிச்சை எடுத்துவந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்வளித்த கார் ஓட்டுநர்.! நெகிழ்ச்சி சம்பவம் !
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஓட்டுநராக பணியாற்றிவரும் அணில், அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்த நீலம் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூர் பகுதியில் வசிக்கும் தொழிலதிபரும், சமூக சேவகருமான லால்டா பிரசாத்திடம் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் அனில். இவர் ஊரடங்கினால் சாலைகளில் வசிக்கும் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோருக்கு தினமும் ஒரு வேளை உணவை லால்டா பிரசாத் மூலம் வழங்கி வந்துள்ளார்.
அணில், கான்பூரில் உள்ள ஒரு பாலத்துக்கு அருகே தினமும் அங்குள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவுகளை வழங்கி வந்துள்ளார். அப்போது அங்கு பிச்சை எடுத்து வந்த பெண்ணிற்கும் தினமும் அனில் வழங்கி வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கும் அனிலுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர், அந்த பெண் குறித்து அனில் விசாரித்த போது, பல சோக நிகழ்வுகளை அந்த பெண் கடந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் பெயர் நீலம். அவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
அவரது தாய்க்கும் பக்க வாதம் ஏற்பட்டதால் நீலத்தின் சகோதரன், நீலத்தை வீட்டை விட்டு துரத்தியுள்ளான். இதனால் தான் நீலம் அந்த பாலத்துக்கு அடியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். இதனை அறிந்த அனில், நீலத்தை திருமணம் செய்துகொள்ள விரும்பி அந்த விருப்பத்தை தனது முதலாளி லால்டா பிரசாத்திடமும், நீலத்திடமும் தெரிவித்தார். அதன் பின்னர் பல சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் புத்தர் ஆசிரமத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு நடைபெற்று முடிந்தது.