அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் அளித்த உச்சநீதிமன்றம்.!
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிபிஐ-யால் கைதாகி இருந்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலில் அமலாக்கத்துறையினர் கைது செய்து இருந்தனர். அடுத்ததாக இதே வழக்கில் சிபிஐ விசாரணை குழுவினரும் கைது செய்தனர்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில், கெஜ்ரிவாலுக்கு முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தாலும், சிபிஐ வழக்கில் அவர் கைதாகி இருந்ததால் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கு விசாரணையில், ‘ நீண்ட காலமாக ஓர் அரசியல் தலைவர் விசாரணைக்காக சிறையில் இருப்பது அவரது சுதந்திரத்தை பறிக்கும் செயல்.’ எனக் கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதன் மூலம் இன்று சிறையில் இருந்து வெளியில் வரவுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.