மருத்துவ ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.!
மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலர் தங்கள் உயிரையும் துட்சமென மதித்து பொதுமக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.
அப்படி பணியாற்றும் ஊழியர்களை நாட்டில் சில இடங்களில் பொதுமக்கள் தாக்கும் அறியாமை அவல நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்கின்றன. சென்னையில் கூட, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்ய மறுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், ஊழியர்களை தாக்க வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் எனவும், மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீதான தாக்குதல்களை இனி பொறுத்து கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.