144 தடை.! ஞானவாபி மசூதி சுவரில் இந்து கடவுள் படங்கள்… முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு.!
உத்திரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி குறிப்பிட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதனை ஒட்டி, இன்று வாரணாசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதன் கோவில் பகுதில் ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த சுவரில் இந்து கடவுள்களின் அடையாளங்கள் (படங்கள் ) இருப்பதாக கூறி 5 பெண்கள் மாவட்ட நீதிமன்றத்தை நாடினர்.
அதாவது, மசூதி சுவரில் உள்ள இந்து கடவுள்களின் படங்களை தரிசிக்க அனுமதி வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இதற்கு எதிராக அஞ்சுமன் இன்டஜமியா மஸ்ஜித் கூட்டமைப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை முழுவதும் முடிவடைந்துவிட்டது. ஆதலால், இன்று மாவட்ட நீதிபதி தீர்ப்பளிக்க உள்ளார். இந்த தீர்ப்பு அந்த பகுதியில் மிகவும் முக்கியமான தீர்ப்பு என்பதால், வாரணாசி முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு, உத்திரபிரதேச காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.