உத்தரப்பிரதேசம்: மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து – 10 குழந்தைகள் உயிரிழப்பு!
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம் குழந்தைகள் 10 பேர் பலியாகினர்.
பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தின்போது, குழந்தைகள் வார்டில் 54 பேர் இருந்த நிலையில், 26 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் 16 குழந்தைகள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சரியாக, இரவு 10.30 முதல் 10.45 மணிக்குள் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக NICU ஊழியர்கள் கூறியதாக மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்தார். குழந்தைகள் வார்டில் ஆக்சிஜன் அதிக அளவில் இருந்ததால் வேகமாக தீ பரவியது.
இதனையடுத்து, தீ விபத்து ஏற்பட்டதும் பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். குழந்தைகள் வார்டில் தீ பற்றி எரிந்த சம்பவம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனர் மற்றும் டிஐஜி அடங்கிய 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.