உ.பி. தீ விபத்து : உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!
உத்தர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு மோடியும், யோகி ஆதித்யநாத்தும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் உயர் சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் 10 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், அங்கு 54 குழந்தைகள் இருந்த நிலையில், 37 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 7 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர்.
அந்த சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் அதிகமாக இருந்த காரணத்தால் தீ உடனடியாக பரவி இருக்கலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகளுக்கு, நாடு,உழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த அந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக மோடியும், யோகியும் தங்களது எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
பிரதமர் மோடியின் பதிவு :
பிரதமர் மோடி அவரது பதிவில், “உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கியுள்ளது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை தர இறைவனை பிரார்த்திக்கிறோம்.
PM @narendramodi has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in the fire accident at Jhansi Medical College in Uttar Pradesh. The injured would be given Rs. 50,000. https://t.co/V8VVQqBb6M
— PMO India (@PMOIndia) November 16, 2024
உ.பி மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்”, என பதிவிட்டுள்ளார்.
யோகி ஆதித்யாநாத் பதிவு :
இது சம்மந்தமாக முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்”, என பதிவிட்டுள்ளார்.