சட்டமன்றத்தில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ.!
உத்திர பிரதேச சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பாஜக எம்.எல்.ஏ ராகேஷ் கோஸ்வாமி சர்ச்சையில் சிக்கி கொண்டார்.
இந்தியாவில், பலரும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி, அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி, கடன் அதிகம் பெற்று அதிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய கோரி மாநிலந்தோறும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பல நடிகர், நடிகைகள் இந்த விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என ஒதுங்கி விட்டனர்.
இப்படி இருக்கும் சூழலில், பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில், சட்டமன்ற கூட்டம் நடைபெற்ற சமயத்தில் ராகேஷ் கோஸ்வாமி எனும் பாஜக எம்.எல்.ஏ சட்ட பேரவை கூட்டம் நடைபெறும் போது ஆன்லைன் ரம்மி விளையாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுளது.
இளைஞர்கள் நலனுக்காக ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களே இப்படி சட்டப்பேரவையில் ரம்மி விளையாடி தவறான முன் உதாரணமாக மாறுவது வேதனைக்கு உரிய ஒன்றாக இருக்கிறது.