6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் ! மத்திய அரசு பேச்சுவார்த்தை
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில் , 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 6-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,இதன் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு ,டிசம்பர் 3-ஆம் தேதிக்கு முன்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்தது.குறிப்பாக பேச்சுவார்த்தைக்கு முன்னர் விவசாய அமைப்புகள் அரசு கூறும் இடத்திற்கு போராட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தது அரசு.இதன்படி மாற்றிக்கொண்டால் பின்னர் விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார்.நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருந்த நிலையில் அதனை புறக்கணிப்பதாக சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் அறிவித்தது.
ஆகவே இன்று பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது.இரண்டு நாட்களுக்கு முன் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.அதாவது நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்தது.ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்திற்கு மத்திய வேளாண்த் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ,உள்துறை அமைச்சர் அமித்ஷா ,பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் சென்றனர்.அங்கு சென்ற அவர்கள் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
தற்போது போராட்டம் நடத்தி வரும் விவசாய அமைப்புகளை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைத்தது மத்திய அரசு.ஆகவே 30 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் விக்யான் பவனில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கற்றுள்ளனர்.மத்திய அரசு சார்பில்,மத்திய வேளாண்த் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ,மத்திய ரயில்வே மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.