அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம்.! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறும் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, ஐந்தாவது முறையாக இன்று நவம்பர் 10ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தனர். அவர்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல அதிகாரிகள் வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து ராஜ்நாத் சிங், எஸ் ஜெய்சங்கர், ஆண்டனி பிளிங்கன் மற்றும் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் அதில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியா-அமெரிக்க இருதரப்பு உறவினால் நாட்டில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளது. நமது இருதரப்பு உறவின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக பாதுகாப்பு உள்ளது.”
“உங்கள் வருகையால் இந்தியாவும் அமெரிக்காவும் முன்பை விட இன்னும் நெருக்கமாக இருக்கும். பல்வேறு அரசியல் சவால்கள் இருந்தாலும், முக்கியமான பிரச்சினைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்தோ-பசிபிக் பகுதியை மேம்படுத்துவதற்கு எங்கள் கூட்டாண்மை முக்கியமானது. திறன் மற்றும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய கூட்டாண்மைகள் முழுவதும் அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.