“யூடியூப் எனக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் தருகிறது”- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி..!
யூடியூப் நிறுவனம் தனக்கு மாதம் ரூ .4 லட்சம் தருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி டெல்லி-மும்பை புதிய விரைவு சாலையின் முன்னேற்றம் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார்.
டெல்லி-மும்பை விரைவுச் சாலை, சுமார் ரூ.95,000 கோடி செலவில் கட்டப்பட்டு, மார்ச் 2023 க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெரும்பான்மையான பணிகள் ஏற்கனவே ஒப்பந்தக்காரர்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டன,இந்த நிலையில்தான், கட்கரி லோஹ்தகி கிராமத்தில் நடந்து வரும் திட்டப் பணியின் நிலையை ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து, ஹரியானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கொரோனா தொற்றுநோய்களின் போது தனது அனுபவங்களைப் பற்றி மனம் திறந்த அமைச்சர்,அந்த சமயத்தில் நேரத்தை அவர் எவ்வாறு பயன்படுத்தினார் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும்,இது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “கொரோனா நேரத்தில், நான் இரண்டு விஷயங்களைச் செய்தேன்-நான் வீட்டில் சமைக்க ஆரம்பித்தேன், வீடியோ மூலம் விரிவுரைகளை வழங்கினேன்.
நான் ஆன்லைனில் பல விரிவுரைகளை வழங்கியது, யூடியூபில் பதிவேற்றப்பட்டன. பெரும் பார்வையாளர்கள் காரணமாக, யூடியூப் இப்போது எனக்கு மாதத்திற்கு ரூ .4 லட்சம் தருகிறது,” என்று அவர் கூறினார்.
In COVID time, I did two things — I started cooking at home & giving lectures through video conference. I delivered many lectures online, which were uploaded on YouTube. Owing to huge viewership, YouTube now pays me Rs 4 lakhs per month: Union Minister Nitin Gadkari (16.09) pic.twitter.com/IXWhDK6wG9
— ANI (@ANI) September 16, 2021
இதனைத் தொடர்ந்து,அவரது கடந்த காலச் சம்பவத்தை நினைவு கூர்ந்த அமைச்சர் தனது மனைவியிடம் சொல்லாமல் மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டதாக கூறினார்.மேலும்,இது குறித்து கூறுகையில்:
“நான் புதிதாக திருமணம் செய்துகொண்ட தருணத்தில், என் மனைவியிடம் சொல்லாமல், என் மாமனார் வீட்டை இடிக்க உத்தரவிட்டேன்”,என்று கூறினார்.அதாவது,சாலை அமைப்பதற்காக அதை இடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக அமைச்சர் கட்கரி கூறினார்.
மேலும்,ஹரியானாவில் நெடுஞ்சாலையின் சுமார் 160 கிலோமீட்டர் பணிகள் மார்ச் 2022 க்குள் முடிவடையும் என்று கூறினார்.குறிப்பாக,டெல்லியில் இருந்து ராஜஸ்தானில் டௌசா மற்றும் வதோதராவிலிருந்து அன்கலேஷ்வர் வரையிலான சாலையின் ஒரு பகுதி மார்ச் 2022 க்குள் கட்டப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், குருகிராம் மக்களவை உறுப்பினர் ராவ் இந்தர்ஜித் சிங் மற்றும் மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.