மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது – பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம்!

Default Image

மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம்.

மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, பாஜக மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை இன்று ரத்னகிரி காவல்துறையினர் கைது செய்தனர். சுதந்திர தின விழாவில், நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே குறித்து மத்திய அமைச்சர் ராணே அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

அதாவது, சுதந்திர தின உரையின் போது, நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்வர் உத்தவ் தாக்கரேவை, நான் அங்கிருந்திருந்தால் அறைந்திருப்பேன் எனக் கூறியதாக கூறப்படுகிறது. சுதந்திர தின உரையின் போது, எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினம் என்பதை முதல்வர் மறந்துவிட்டார். இது அவமானமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரேவை அவமதித்ததாக கூறி, சிவசேனா கட்சி தொண்டர்கள் ஏற்கனவே போராட்டம், வன்முறையில் ஈடுபட்டியிருந்தனர். மத்திய அமைச்சர் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை, நாசிக், புனே உள்ளிட்ட பகுதிகளில் பாஜக அலுவலங்கள் மீது சிவசேனா தொண்டர்கள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனிடைய, அமைச்சர் நாராயண் ரானேவுக்கு எதிராக சிவசேனா கட்சி நிர்வாகிகள்  நாசிக் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இன்று மத்திய அமைச்சரை அவதூறு பேச்சு தொடர்பாக கைது செய்தனர். இந்த நிலையில், நாராயண் ரானே கைது செய்யப்பட்டதற்கு பாஜக கண்டனம் தெரிவித்து வருகிறது.

அந்தவகையில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிர போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே ஜியை மகாராஷ்டிரா அரசு கைது செய்தது அரசியலமைப்பு சட்டங்களை மீறிய செயலாகும். இதுபோன்று நடவடிக்கையால் நாங்கள் பயப்படமாட்டோம். ஆசீர்வாத யாத்திரையில் பாஜகவுக்கு கிடைக்கும் மகத்தான ஆதரவால் இதுபோன்ற செயல்கள் நடக்கிறது. நாங்கள் ஜனநாயக முறையில் தொடர்ந்து போராடுவோம், பயணம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்