விரைவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்? மத்திய அமைச்சர் முக்கிய தகவல்!
வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் திட்டத்தை செயல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சி வருகிறது. இதற்கான முதற்கட்ட பணியாக, இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள சத்திய கூறுகளை ஆய்வு செய்வதற்கு முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்த்து.
இந்த குழு ஆய்வு செய்ததில், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்றும், மாநில உள்ளாட்சிகளுக்கு தனியாக தேர்தல் நடந்தலாம் என்றும் ராம்நாத் கோவிந்த் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இந்த திட்டம் குறித்து இன்று கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், “நாட்டை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச்செல்ல 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மீதம் உள்ள ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்திற்கான வேலைகளை செய்ய வேண்டும். மத்திய அரசு ஒரே நாடு ஒரே திட்டத்தை விரைவில் செயல்படுத்தும் என நம்புகிறேன்.
வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு திட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படும் என நம்புகிறேன். ” என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.