வங்கதேசத்தில் சிக்கியுள்ள 19,000 இந்தியர்கள்… மத்திய அமைச்சர் முக்கிய தகவல்.! 

External Affairs Minister Jai Shankar spoke about Bangladesh Issue

டெல்லி : வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் பின்னாளில் கலவரமாக மாறி நூற்றுக்கணக்கானோர்கள் உயிரிழக்கும் நிலையை உருவாக்கிவிட்டது. நாட்டின் நிலைமை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ராணுவம் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பி வந்துள்ளார்.

இந்தியாவில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனா, பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரம் குறித்தும், வங்கதேச கலவரம் குறித்தும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று மாநிலங்களவியில் விளக்கம் அளித்தார்.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், “ வங்கதேச பாதுகாப்பு அமைப்பு தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, ஷேக் ஹசீனா ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளார். பின்னர் இந்தியாவுக்கு வருவதற்கு ஒப்புதல் கோரினார். ஒப்புதல் பெற்ற பின்னர் நேற்று மாலை டெல்லிக்கு வந்தார்.

எங்கள் தூதரக அதிகாரிகள் மூலம் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுடன் நாங்கள் நெருக்கமான தொடர்பில் இருக்கிறோம். அங்கு 19,000 இந்தியர்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில் சுமார் 9000 பேர் மாணவர்கள். பெரும்பாலான மாணவர்கள் ஜூலையில் நாடு திரும்பி விட்டனர். அங்குள்ள சிறுபான்மையினர்கள் (இந்துக்கள்) நிலை குறித்தும் நிலைமையை கண்காணித்து வருகிறோம்.

அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த பல்வேறு குழுக்கள் கண்காணித்து வருகின்றன. வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக வேண்டும். இந்த சிக்கலான சூழ்நிலையின் எச்சரிக்கையாக இருக்குமாறு நமது எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், டாக்காவில் உள்ள அரசு அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம். ஆகஸ்ட் 5 அன்று, ஊரடங்கு உத்தரவையும் மீறி டாக்காவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்தனர் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்