மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜர் ..!
மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விசாரணைக்கு லக்கிம்பூர் குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஒரு வருடங்களாகவே பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த போராட்டத்தில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த 3-ம் தேதி லக்கிம்பூர் கேரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் உத்தரபிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார். அப்போது விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டனர்.
திடீரென கார் ஒன்று விவசாயிகள் மீது மோதியது. இதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பின்னர் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்திரபிரதேச போலீசார் தொடர்ந்து வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக 2 நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவிற்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், ஆசிஷ் மிஸ்ரா அன்றைய தினம் ஆஜராகவில்லை. பின்னர், போலீஸ் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் இன்று காலை 11 மணிக்குள் ஆஜராகவில்லை என்றால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று உத்தரபிரதேச போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை10:30 மணி அளவில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் ஆசிஷ் மிஸ்ரா லக்கிம்பூர் குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். ஆசிஷ் மிஸ்ராவுடன் அவரது வழக்கறிஞர்களும் வந்துள்ளனர்.