மிக்ஜாம் புயல்: பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

amit sha

மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்துள்ளார். அப்போது, புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துரைத்தார். கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர புயலான மிக்ஜாம் புயல் கடலோர மாவட்டங்களை புரட்டிப்போட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் மாநில மற்றும் தேசிய பேரிடர் குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் கேட்டறிந்துள்ளார்.

நாளை முதல் டிச.9 வரை… அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

இதுதொடர்பான செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜாம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திடுமாறும் கேட்டுக் கொண்டார். உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் மத்திய அரசிடம் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, உள்துறை அமைச்சர் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார் என்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்