ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், அமைச்சர் அமித்ஷா வழிபாடு செய்தார்.

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவே 8:50 மணிக்கு கோவை பீளமேடு விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அங்கு வருகை தந்த அவருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை 6 மணிக்கே விழா தொடங்கிய நிலையில், அதில் கலந்து கொள்ள அமித் ஷா சரியாக 6 மணிக்கு முன்பே இஷாவிற்குள் வருகை தந்துவிட்டார்.
வருகை தந்த அவருக்கு சத்குரு திருவைந்தெழுத்து மகா மந்திரத்தை தீட்சையாக வழங்கினார். அதன்பிறகு அங்கிருந்த தியானலிங்கத்திற்கு விசேஷ ஆராதனை செய்து வழிபாடு செய்துகொண்டார். அதைப்போல, பைரவிதேவிக்கு சிறப்பு பூஜை செய்ததுடன், சத்குருவுடன் சேர்ந்து நாகபூஜை வழிபாடிலும் பங்கேற்றார்.
இதனைத்தொடர்ந்து தியானம் தொடங்கப்படவுள்ள நிலையில், அதிலும் அமித் ஷா பங்கேற்கவிருக்கிறார். விழா இன்று மாலை 6 மணி முதல் பிப்ரவரி 27 காலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது என்பதால் முழுவதுமாக அவர் தியானம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விழாவில் ஆன்மீக தியானங்கள், வேத மந்திர உச்சாடனைகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.