“மும்மொழிக் கொள்கையில் இந்தியை திணிக்கவில்லை” – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.!
தமிழ்நாடு மாணவர்கள் மற்றொரு இந்திய மொழியை கற்பதில் என்ன தவறு? என்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி : கடந்த சனிக்கிழைமை வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,“ புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது. தமிழ்நாடு அரசு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால் நிதி விடுவிக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? என அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில், இந்தியை திணிக்கவில்லை என அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் “தேசியக் கல்விக் கொள்கையில் நாங்கள் இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் திணிக்கவில்லை. தமிழ், ஆங்கிலத்துடன் மற்றொரு இந்திய மொழியை தமிழ்நாடு மாணவர்கள் கற்பதில் என்ன தவறு?
தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே பிரதமர் மோடி தேசிய கல்விக் கொள்கையை முன்னெடுத்துள்ளார். எனவே, நாங்கள் அனைத்து மொழிகளையும் மதிக்கிறோம்.
தமிழகத்தில் உள்ள சிலர் இதில் அரசியல் செய்கின்றனர். தேசிய கல்விக்கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் தருகிறது.தமிழ் மொழி பழமையானதுதேசிய கல்விக்கொள்கை பிரதமரின் கனவு திட்டம். இதை செயல்படுத்துவதில் அரசு உறுதியாக இருக்கிறது” எனவும் அவர் தெரிவித்தார்.