மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு.! மத்திய அரசின் அசத்தல் திட்டம்.!
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் மருத்துவக் காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி : நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் மருத்துவ செலவீனங்களை போக்கும் நோக்கில் மத்திய அமைச்சரவை இன்று புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு காப்பீடு அளிக்கும் நோக்கில் இந்த திட்டம் அமைந்துள்ளது
இத்திட்டம் மூலம், நாட்டில் உள்ள சுமார் 6 கோடி மூத்த குடிமக்கள் பயன் பெறுவார்கள். எனவும், 4.5 கோடி குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் ரூ.5 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு (இன்சூரன்ஸ்) பெறுவார்கள் .
மேலும் சில தகவல்கள்…
- நாட்டில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் பலனடைய தகுதியுடையவர்கள். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்களும் இத்திட்டம் மூலம் பயன்பெறலாம். இது முழுக்க முழுக்க மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பலன் தரும். அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் இதில் பயன்படுத்த முடியாது.
- ஏற்கனவே, தனியார் மருத்துவக் காப்பீடு (இன்சூரன்ஸ்) உள்ள மூத்த குடிமக்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தைப் பெற தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தனித்தனி அட்டை வழங்கப்படும்.
- மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சுகாதாரத் திட்டம் (ECHS) மற்றும் ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் உள்ள மூத்த குடிமக்கள், தங்களின் தற்போதைய காப்பீட்டிற்கு இடையே இத்திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டமானது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு மூத்த குடிமக்களுக்கும் ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
பிரதமர் வாழ்த்து :
பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் இத்திட்டம் குறித்து பதிவிடுகையில் , “ஒவ்வொரு இந்தியரும் குறைவான விலையில், உயர்தர சுகாதார சேவையை பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது . இந்தத் திட்டம் 6 கோடி குடிமக்களுக்கு மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்யும்!” எனப் பதிவிட்டுள்ளார்.