பக்க விளைவுகளுக்கு இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பு – சீரம் நிறுவனம் கோரிக்கை!
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியாத பாதுகாப்பை தங்கள் நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும் என சீரம் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே, மக்கள் பலரும் தற்போது தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் தற்போது பல இடங்களில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் வெளிநாட்டு தடுப்பூசிகளான பைசர் மற்றும் மாடர்னா இந்தியாவில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த மருந்துகளுக்கு மத்திய அரசு காப்பீடு வழங்கும் என கூறப்படுகிறது. அதாவது தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு நிறுவனங்களிடம் இருந்து பொதுமக்கள் இழப்பீடு கோர முடியாத அளவிற்கு பாதுகாப்பை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பைசர் மற்றும் மாடர்னாவுக்கு வழங்கப்படக்கூடிய பாதுகாப்பை இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்க கூடிய மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வேண்டும் என அந்நிறுவனம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.