உக்ரைன் மருத்துவ மாணவர்கள் வழக்கு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு.
உக்ரைன் – ரஷ்யா தொடர் போர் காரணமாக தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி இருந்தார்கள். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது, தங்கள் கல்வியை சொந்த நாட்டிலேயே தொடர வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது.
நேற்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர முடியாது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்திருந்தது. மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும் என்றும் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர வழிவகை செய்யும் முறை தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடமில்லை எனவும் கூறியிருந்தது.
இந்த நிலையில், இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் அண்டை நாடுகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ, இணையதளத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ பட்டம் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணையை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்தது உச்ச நீதிமன்றம்.