உஜ்வாலா யோஜனா திட்டம் 2.0.., சற்று நேரத்தில் தொடங்கி வைக்கும் பிரதமர்..!
உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான உஜ்வாலா யோஜனா 2.0 திட்டத்தை இன்று மதியம் 12:30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி தொடங்குகிறார். இந்த திட்டத்தின் பயனாளிகளுடன் உரையாடுவார். இந்த நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி அமிர்தசரஸ், டேராடூன், இம்பால், வடக்கு கோவா மற்றும் கோரக்பூரில் தலா ஒரு பெண் பயனாளியுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடுவார். அதன் பிறகு அவர் நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.
உஜ்வாலா திட்டம் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
நாட்டிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டம் 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் தொடர்ச்சியாக ஏப்ரல் 2018 இல் மேலும் ஏழு பிரிவுகளை பெண் பயனாளிகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் (பட்டியலின/பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீவுகள்) சேர்ந்த பெண்களுக்கும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனால், இத்திட்டத்துக்கான இலக்கும் 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கு 2019 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக முடிக்கப்பட்டது. இதற்கிடையில், 21-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்,உஜ்வாலா யோஜனா இன் கீழ் ஒரு கோடி கூடுதல் LPG இணைப்புகளை வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த ஒரு கோடி கூடுதல் உஜ்வாலா யோஜனா இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.