லக்கிம்பூர் வன்முறை-மத்திய அமைச்சர் மகனின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் கைது…!
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்டோபர் 3 ஆம் தேதி காலை உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தனர். அப்போது மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அமைச்சரின் மகன் சென்ற வாகனம் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்டுகிறது.
பின்னர், ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பொதுமக்கள் 4 பேர் , பத்திரிகையாளர் ஒருவர் என 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து,இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும்,வன்முறை தொடர்பான அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும் உத்தரபிரதேச அரசுக்கு இன்று கேள்வி எழுப்பியிருந்தது.இதற்கிடையில்,மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்யக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்,போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காரை மோதிய சம்பவத்தில் மேலும்,3 பேரிடம் உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து ,மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை போலீசார் தேடி வருகின்றனர்.