கேரளா தங்கக்கடத்தல் விவகாரம்… முக்கிய குற்றவாளிகள் கைது… என்.ஐ.ஏ தகவல்…
கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்டுள்ளதாக, என்.ஐ.ஏ.,தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள, யு.ஏ.இ., துாதரகத்தின் பெயரில், தங்கம் கடத்தப்பட்டு வந்தது கடந்த சில மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில், துாதரகத்தின் முன்னாள் ஊழியரான, ஸ்வப்னா சுரேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நடைபெரும் கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ., தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான பைசல் பரீத், ராபின்ஸ் ஹமீது ஆகியோர், யு.ஏ.இ.,யில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உட்பட, ஆறு பேரை கைது செய்து, இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு, சர்வதேச காவல்துறையான, ‘இன்டர்போல்’ அமைப்பின் உதவி நாடப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சந்தீப் நாயர் சார்பில், அலுவா நீதிமன்றத்தில், அவர்சார்பாக ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘வழக்கு தொடர்பாக எனக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் தானாக முன்வந்து தெரிவிக்கத் தயாராக உள்ளேன்’ என, அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.