10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு பொதுத்தேர்வுகள்…!
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு பருவங்களாக தேர்வுகள் நடத்தி மதிப்பீடுகளை வழங்கும் முறையை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் , கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. தற்போது 2021-2022 ஆம் ஆண்டு கல்வி ஆண்டை சிபிஎஸ்சி வாரியம் இரண்டாக பிரித்து உள்ளது. அதன்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் இரண்டு பருவங்களாக தேர்வுகள் நடத்தி மதிப்பீடுகளை வழங்கும் முறையை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, 2021 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒரு பருவத்தேர்வும், 2022-ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இரண்டாவது பருவத் தேர்வும் நடத்த முடிவு எடுத்துள்ளது. முதல் பருவத் தேர்வில் கேள்விகள் ஏதும் இல்லாமல் சரியான விடையை மட்டும் தேர்ந்தெடுத்து எழுதுவது போன்ற வடிவில் வினாத்தாள் அமைக்கப்பட்டிருக்கும். இதற்காக மாணவர்களுக்கு ஓஎம்ஆர் ஷீட் வழங்கப்படும். இந்த தேர்வை எழுத 90 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இரண்டாம் பருவ தேர்வில் மாணவர்கள் குறுகிய, நீண்ட விடை அளிக்கும் விதத்தில் கேள்வி கேட்கப்படும். இந்த தேர்வுக்கு 2 மணி நேரங்கள் வழங்கப்படும் என்றும், கொரோனா பரவல் அதிகமாக காணப்பட்டால், முதல் பருவத்தேர்வை போல, சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும் முறையிலே தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2021-2022-ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்க இயலாத சூழல் காணப்பட்டால், மாணவர்கள் தேர்வை வீட்டில் இருந்தவாறே எழுதலாம் என்றும், உள்மதிப்பீடு, செய்முறைத் தேர்வு, ப்ராஜெக்ட் ஆகியவை வழிகாட்டுதலின்படி நம்பகத்தன்மையான முறையில் நடத்தப்பட்டு அந்த மதிப்பெண்களும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.