ட்விட்டர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!
ட்விட்டர் இந்திய சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் இந்திய சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடக தளங்களில் இருந்து நீதித்துறைக்கு எதிரான இழிவான உள்ளடக்கத்தை திரும்பப் பெற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இணங்காததால் ஆந்திரபிரதேச உயர்நீதிமன்றம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் நீதிபதி எம். சத்யநாராயண மூர்த்தி தலைமையிலான அமர்வு ட்விட்டர் இந்திய சட்டத்துடன் “மறைந்து விளையாட முடியாது” என்றும், அது இந்தியாவில் செயல்பட விரும்பினால் நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இது தெளிவாக அவமதிப்பு வழக்கு என்றும், ட்விட்டர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறியது.
மேலும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட கூகுளுக்கு எதிரான சமீபத்திய தீர்ப்பையும் நீதிமன்றம் நினைவுபடுத்தி இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிபிஐ வழங்கிய அனைத்து சர்ச்சைக்குரிய URLகளையும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் நீக்கிவிட்டதாக யூடியூப்பின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் ததர் தெரிவித்தார்.